‘திரிஷ்யம்’ திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக இயக்குனர் ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார் .
மலையாள திரையுலகில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘திரிஷ்யம்’ . மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ,நடிகை மீனா நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது . இந்த படம் தமிழில் கமல்ஹாசன் ,கவுதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது . மேலும் இந்த படம் தெலுங்கு ,கன்னடம் ,இந்தி மொழிகளிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . இந்தியாவையும் தாண்டி சீனாவிலும் இந்தப் படம் ரீமேக்காகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் இயக்குனர் ஜீத்து ஜோசப் ‘திரிஷ்யம்’ திரைப்படம் ஹாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து இயக்குனர் ஜீத்து ஜோசப் ‘ஹாலிவுட்டில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் இந்த படத்தின் ரீமேக்குகாக என்னை அணுகினார் . அதன்படி ஆங்கிலத்தில் ஸ்கிரிப்ட் அனுப்பி வைத்தேன். விரைவில் நல்ல தகவல் வரும் என எதிர்பார்க்கிறேன்’ என்று கூறியுள்ளார் . மேலும் திரிஷ்யம் படத்தில் கொலைக்கான தடையங்களை மறைக்கும் வேலையை ஹீரோ செய்வார் என்ற நிலையில் ஹாலிவுட்டில் மட்டும் அது ஹீரோயின் செய்வது போல் கதையை மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார் . ஹாலிவுட்டில் இந்த படம் தயாராவது உறுதி செய்யப்பட்டால் ஆஸ்கர் விருது பெற்ற நடிகை ஹிலாரி சுவாங் கதாநாயகியாக நடிப்பார் என்றும் கூறியுள்ளார் .