பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சக்திவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தானது பட்டாசு மருந்துகளுக்கு இடையே ஏற்பட்ட உராய்வின் காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இந்த தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில் பட்டாசு ஆலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைப் பற்றி கவலைப்படுகிறேன் என்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன் என்று பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.