காட்டு பன்றி என நினைத்து துப்பாக்கியால் நண்பரை சுட்டு, அவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டமஞ்சு வன்னியபுரம் கிராமத்தில் பசப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிக்கமஞ்சு கிராமத்தில் வசித்து வரும் நாகராஜ் என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் ஒரு நாட்டு துப்பாக்கியை வைத்துக்கொண்டு இரவு நேரத்தில் காட்டு பன்றியை வேட்டையாடுவதற்காக வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். அப்போது நண்பர்கள் இருவரும் காட்டுபன்றிகளை வெவ்வேறு திசைகளில் கண்காணித்தபடி சென்றுள்ளனர். அந்த சமயத்தில் ஏதோ சத்தம் கேட்டதால் காட்டுப்பன்றி வருவதாக நினைத்து நாகராஜ் தனது கையிலிருந்த துப்பாக்கியால் இருமுறை சுட்டு விட்டார்.
அப்போது ஐயோ என சத்தம் போட்டபடி மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் பசப்பா கீழே விழுந்து இறந்து விட்டார். இதனை பார்த்த நாகராஜ் பயந்து போய் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் காலை வேளையில் அப்பகுதிக்கு சென்ற சிலர் குண்டு பாய்ந்து பசப்பா இறந்து கிடந்ததை பார்த்து உடனடியாக அஞ்செட்டி வனத்துறையினருக்கு, போலீசாருக்கும் தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய நாகராஜனை தீவிரமாக தேடி வருகின்றனர்.