நாடு முழுவதும் பாஸ்டேக் பயன்படுத்த குறைந்தபட்ச இருப்பு நிலையை தேசிய நெடுஞ்சாலைத்துறை ரத்து செய்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை உள்ளது. இங்கு கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதால் போக்குவரத்து நெரிசலும், கால விரயமும் ஏற்படுகிறது. இதை கருத்தில்கொண்டு, பாஸ்டேக் எனும் மின்னணு முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. மேலும் 2021ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் இம்முறை கட்டாயம் என மத்திய அமைச்சகம் அறிவித்து இருந்தது. இதனை மீறினால் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
இந்நிலையில் பாஸ்டேக் பயன்படுத்த குறைந்தபட்ச இருப்பு நிலையை தேசிய நெடுஞ்சாலைத்துறை ரத்து செய்துள்ளது. இந்த வசதி கார், ஜீப் மற்றும் வேன்களுக்கு மட்டுமே பொருந்தும். வணிக வாகனங்களுக்கு குறைந்தபட்ச இருப்பு கட்டாயம். அதாவது பாஸ்டேக் கணக்கில் பணம் குறைவாக இருந்தாலும் கார் டோல் பிளாசாவை கடக்க அனுமதிக்க வேண்டும். வாடிக்கையாளர் பாஸ்டேக் ரீச்சார்ஜ் செய்யாவிட்டால் பாதுகாப்பு வைப்பில் இருந்த அந்தத் தொகையை வங்கி மீட்டெடுக்க முடியும் என தெரிவித்துள்ளது.