புதுச்சேரிக்கு இந்தியாவில் இருந்து மட்டுமல்லாது, பிரான்ஸ், கனடா, இத்தாலி, ஆஸ்திரேலியா ஆகிய பல்வேறு நாடுகளில் இருந்து விடுமுறையை கழிப்பதற்காக ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை புரிகின்றனர். கடற்கரை சாலையில், பிரெஞ்சு பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கட்டிடங்கள் மற்றும் சாலைகளில் நின்று புகைப்படம் எடுபார்கள்.
புதுச்சேரியில் புதிதாக இடம் பெற்றிருப்பது “லவ் லாக்” மரம். இதனை தனியார் உணவக உரிமையாளர் சதீஷ் என்பவர் அமைத்துள்ளார். எங்கேயும் காதல் என்ற திரைப்படத்தில் காணப்படும் லவ் லாக் மரத்தை போல் புதுச்சேரியில் அமைத்துள்ளனர்.
இந்நிலையில் இதனை அறிந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இந்த ஹோட்டலுக்கு வந்து “லவ் லாக்” மரத்தில் தங்கள் காதல் பிரிய கூடாது என்பதற்காக பூட்டு போட்டுவிட்டு மகிழ்கின்றனர். இதுவரை இந்த லவ் லாக் மரத்தில் 1000-க்கும் மேற்பட்ட பூட்டுகள் இங்கு உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் சதீஷ். மேலும் இந்த லவ் லாக் மரத்திற்காகவே பலரும் இங்கு வருகை புரிவதாகவும் அவர் கூறியுள்ளார். புதுச்சேரி மாநிலம் குட்டி பிரான்ஸ் என்று கூறப்பட்டு வரும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள பழக்க வழக்கங்கள் அனைத்தும் தற்போது புதுச்சேரியிலும் பிரதிபலிக்க ஆரம்பித்துள்ளது.