கார் டிரைவர் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி அவருடைய மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்திலுள்ள மெட்டுக்குளம் பகுதியில் கார் டிரைவரான தினேஷ் வசித்து வருகிறார். இவர் ரூபிகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு எஸ்வந்த் என்ற மகன் இருக்கின்றான். அதோடு ரூபிகா இப்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் பாகாயம் தொரப்பாடி பகுதியில் கடந்த 10ஆம் தேதி தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் தினேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் தினேஷ் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பாகாயம் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளனர். இதைப்பற்றி தினேஷ் உறவினர்கள் பேசியதாவது.
தினேஷ் திருமணமான பிறகு தனது மனைவியுடன் காட்பாடியில் வசித்து வந்தார். தினேஷிற்கும் அவர் பணிபுரிந்த கால் டாக்சி நிறுவன உரிமையாளருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தினேஷ் இறப்புக்கு முந்தைய தினம் சிலபேர் அவரது வீட்டிற்கு வந்து தினேஷையும் அவருடைய மனைவியையும் அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பின்பு அன்றைய தினம் இரவே ரூபிகாவை மட்டும் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனை அடுத்து ரூபிகாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தினேஷ் பணம் தந்தால் மட்டுமே தன்னை விடுவார்கள் என்று கூறியுள்ளார். அதற்கு ரூபிகா மறுநாள் காலை பணத்துடன் வருவதாக கூறியுள்ளார். ஆனால் தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கோபிகாவுக்கு மறுநாள் காலை தகவல் வந்துள்ளது. எனவே தினேஷின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.