முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி வாகனம் நிறுத்துமிடம் கட்டுவதற்கு கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
2016ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை அருகே வாகன நிறுத்துமிடம் கட்டுவதற்கு கேரள அரசு முயற்சி எடுத்தது. இதற்கு எதிராக அப்போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் வெளியிட்ட தீர்ப்பில் வாகன நிறுத்தம் கட்ட தடை ஏதும் இல்லை என தெரிவித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அதில் கேரள அரசு முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக மற்றொரு புதிய அணையை கட்ட பெரிய கனரக வாகனங்களை நிறுத்த வசதி இல்லாததால் வாகன நிறுத்தும் வசதி ஏற்பாடு செய்வது போல் அணை கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறது. மேலும் இம்மாதிரியான செயல்கள் முழு பலத்துடன் இருக்கக்கூடிய முல்லைப் பெரியாறு அணையை பலவீனப்படுத்துவதால் கேரளாவுக்கு முல்லை பெரியாறு அணையில் எந்தவித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது என்று மேல்முறையிடு செய்தது .
அதன்பின் இதை விசாரித்த நீதிபதிகள் முல்லை பெரியாறு அணை தொடர்பாக கட்டுமான பணிகளை மேற்கொள்ள கூடாது என்று தடை விதித்திருந்த நிலையில், அதனை மீறும் விதமாக கேரள அரசு வாகன நிறுத்த கட்டுமான பணிகளை மேற்கொண்டது ஆதாரத்துடன் வெளிவந்தது. இதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல்,உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கூட பின்பற்றமாட்டீர்களா? என்று கோபத்துடன் கேள்வி எழுப்பியிருந்தது. இதனை கேரள அரசு மறுத்த நிலையில் இதற்கான பதிலை 15 நாட்களுக்குள் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.