விபத்தை தடுக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட செயலியானது தமிழகத்தில் நாளை முதல் அமலுக்கு வரும் என அதிகாரிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தகவலியல் மையம் சார்பில் ஐராடு என்ற புதிய செல்போன் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் சாலையில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு விபத்திற்கான காரணங்கள், உயிரிழப்பு மற்றும் வாகன விவரங்கள் போன்றவற்றை பதிவேற்றம் செய்து ஆவணங்களாக சேகரிக்கும் பணியை அரசு விரைவில் தொடங்க உள்ளது. இந்த செயலியானது நெடுஞ்சாலைத் துறை, சுகாதாரத் துறை, காவல் துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை போன்ற 4 துறைகளையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த செயலியில் காவல்துறையினர் விபத்து நடந்த இடத்திற்கு சென்று அந்த விபத்தில் காயமடைந்தவர்கள், இறந்தவர்கள், வாகனத்தின் விவரம் மற்றும் அந்த விபத்திற்கான காரணம் போன்ற அனைத்தையும் பதிவேற்றம் செய்வதற்கான வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து இந்த செயலியில் விபத்து விவரங்களை பதிவு செய்வது குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றுள்ளது.
அப்போது வட்டார போக்குவரத்து துறை, காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் கலந்துகொண்ட இந்த பயிற்சியில், திருப்பூர் மாவட்ட தேசிய தகவலியல் அதிகாரி கண்ணன் இந்த செயலியை பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளித்தார். அதாவது இந்த செல்போன் செயலி மூலமாக விபத்து வழக்கு தொடர்பான விவரங்களை போலீசார் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரி, சுகாதார அலுவலர், வட்டார போக்குவரத்து அதிகாரி போன்றோர் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்து அதன் விவரங்களை இந்த செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இவ்வாறாக விபத்துக்கான காரணத்தை பதிவேற்றம் செய்வதன் மூலம் வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்கான வழிமுறை, விபத்தை தடுப்பதற்கு சாலையை விரிவாக்கம் செய்வது மற்றும் விபத்தை குறைப்பதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில்லா நகரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த செயலியானது தமிழகம் முழுவதும் நாளை முதல் அமலுக்கு வருவதாக அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.