Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வங்கியில் பணிபுரிவதாக ஏமாற்றிய வாலிபர்… நூதன முறையில் பண மோசடி… அதிர்ச்சியில் பெண் அளித்த புகார்…!!

தனியார் வங்கியில் பணிபுரிவதாக கூறி பெண்ணிடமிருந்து 3 லட்சத்து 70 ஆயிரம் பணத்தை நூதன முறையில் பறித்து பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள சூலை பள்ளம் பாரதியார் தெருவில் சிரஞ்சீவி-விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் விஜயலட்சுமி கே.கே நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அசோக் நகரில் வசித்து வரும் அருண் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இவர் விஜயலட்சுமியிடம் தான் பிரபல தனியார் வங்கியின் அசோக் நகர் கிளையில் பணிபுரிந்து வருவதாக கூறி இருக்கிறார். இதனால் விஜயலட்சுமி தனது கணவர் நடத்திவரும் தொழிலை விரிவுபடுத்த வேண்டும் எனவும், அதற்காக வங்கியில் 25 லட்சம் கடன் பெற்று தருமாறும் அவரிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அருண்  தேவைப்படும் ஆவணங்களை விஜயலட்சுமியிடம் இருந்து வாங்கி 20 நாட்களில் கடன் பெற்று தருவதாக கூறி இருக்கிறார். இதனையடுத்து அருண் ஒரு வாரம் கழித்து வந்து வங்கியிலிருந்து ஒப்புதல் கிடைத்துவிட்டது என்றும், ரூபாய் 25 லட்சம் பணம் இரண்டு நாட்களில் கிடைத்துவிடும் என்றும் கூறியிருக்கிறார். அதன்பின் ரூபாய் 3 லட்சத்து 70 ஆயிரம் பணத்தை தனது வங்கி கணக்கில் செலுத்தி உதவி செய்யுமாறும், அந்த பணத்தை இரண்டு நாட்களில் திருப்பி தருவதாகவும் கூறியுள்ளார். அவர் கூறியதை உண்மை என்று நம்பிய விஜயலட்சுமி தனது நகைகளை அடமானம் வைத்து 3 லட்சத்து 70 ஆயிரம் பணத்தை அவரிடம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் அவர் கடனாக வாங்கிய 3 லட்சத்து 70 ஆயிரம் பணத்தை திருப்பித் தரவில்லை. அதோடு வங்கியிலிருந்து கடன் ஏதும் வாங்கி தரவில்லை. இதனை அடுத்து அந்த வங்கிக்கு சென்று விஜயலட்சுமி விசாரித்தபோது, வங்கியில் வேலை பார்ப்பதாக கூறி அருண் பல பேரிடம் இவ்வாறாக ஏமாற்றி நூதன முறையில் பணம் பறித்து மோசடியில் ஈடுபட்டது விஜயலட்சுமிக்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் எம்.ஜி.ஆர் நகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அருண் மீது புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அருண் பண மோசடியில் ஈடுபட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |