8 கிலோ கஞ்சாவுடன் வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள சிங்கராஜபுரம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் வருசநாடு காவல்துறையினர் மோப்ப நாய்களுடன் சிங்கராஜபுரத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேடுதல் வேட்டையில் வேலு என்பவருடைய வீட்டின் முன்புறத்தில் பள்ளம் தோண்டி அதில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை மோப்ப நாய்கள் கண்டுபிடித்துள்ளது.
அந்த இடத்தை தோண்டி 8 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வினோத்காம்பிளி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது இந்த சம்பவத்தில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தலைமறைவான 3 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.