பெற்றோரை இழந்த துக்கத்தில் சிறுமி கதறி அழுத சம்பவம் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள அச்சம் குளத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் நடுசுரங்குடி பகுதியில் வசித்துவந்த பாக்யராஜ்-செல்வி தம்பதியினரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இவர்கள் அந்த பட்டாசு ஆலையில் நீண்ட நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் காலையில் வழக்கம் போல பணிக்கு சென்று தனித்தனி அறைகளில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் செல்வி வேலை பார்த்துக்கொண்டிருந்த அறையில் தான் முதன் முதலில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த பாக்யராஜ் பதட்டத்துடன் மனைவியை பார்ப்பதற்காக அவர் வேலை பார்த்த அறையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் இருந்த மற்றொரு பட்டாசு ஆலையில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் பாக்கியராஜ் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். இதனை அடுத்து மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் காயமடைந்த பாக்கியராஜை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதேபோல் கருகிய நிலையில் மீட்கப்பட்ட செல்வியும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.
இந்த தம்பதிகளுக்கு 8 ஆண்டுகள் கழித்து பிறந்த நந்தினி என்ற 7 ஆம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். இவர்கள் இறந்த தகவலானது அவர்களுடைய உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அந்த சிறுமி நந்தினியுடன் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது பெற்றோரை இழந்த துக்கத்தில் சிறுமி கதறி அழுத சம்பவம் அனைவரின் நெஞ்சையும் உலுக்கியது. இதையடுத்து கதறி அழுத அந்த சிறுமியை உறவினர்கள் தேற்றி, பரிசோதனை முடிந்து செல்வியின் உடல் கொண்டு செல்லப்பட்ட அதே வாகனத்தில் சிறுமி நந்தினியையும் அழைத்து சென்றுவிட்டனர்.