தனியார் நிறுவன பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள காட்ராம்பாக்கத்தில் வெங்கடேஸ்வரா என்ற தனியார் கேட்டரிங் சர்விஸ் நிறுவனத்தில் உலா பாதாள சாக்கடையை சுத்தம் செய்வதற்காக நிறுவன உரிமையாளர் அந்த பகுதியை சேர்ந்த பாக்யராஜ் (40), முருகன்(40), ஆறுமுகம் (42) ஆகியோரை அழைத்து வந்துள்ளார். இதையடுத்து அவர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தொட்டிக்குள் இருந்த மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். இதையடுத்து தகவலிருந்து வந்த காவல்துறையினர் 3 பேரின் சடலங்களையும் கைப்பற்றி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்றைய நவீன காலகட்டத்தில் எவ்வளவோ வசதிகள் வந்துவிட்டன. இதுபோன்றே கழிவுநீர் தொட்டிகளில் உள்ள கழிவுகள் எந்திரங்கள் மூலமாக உறிஞ்சப்பட்டு கழிவுநீர் வானங்களில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுகின்றது. அப்படியான வசதி இருந்தும், பணத்தை மிச்சப்படுத்துவதற்காக மனித கழிவுகளை மனிதர்களே சுத்தம்படுத்தும் வேலையை ஏற்படுத்தி கொடுக்கின்றனர். தொட்டிக்குள் இறங்கி உயிரைப் பணயம் வைத்து வெறும் கைகளால் சுத்தம் செய்வது அறியாமை மற்றும் அலட்சியத்தின் வெளிப்பாடாக இங்கு உள்ளது. இவ்வாறு உயிருக்கு ஏதேனும் நேர்ந்தாலும் யாரும் கண்டுகொள்வதில்லை என்று பல குற்றசாட்டுகள் எழுகின்றன.