பிரதமர் மற்றும் முதல்வர் சந்தித்து ஆலோசனை நடத்தியது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒரு நாள் பயணமாக தமிழகம் வந்திருந்தார். இதையடுத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் விழா முடிந்த பிறகு தனியாக முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையில் துணை முதல்வர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஆலோசனையில் கூட்டணி குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இந்த ஆலோசனையில் என்ன பேசப்பட்டது என்பது குறித்தும் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய அவர், “பிரதமர் அரசு சம்பந்தமான பயணமாக தான் சென்னை வந்தார். வண்ணார்பேட்டை விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவையால் வடசென்னை மக்களின் கனவு நிறைவேறியது. பிரதமர் மற்றும் முதல்வர் சந்திப்பு என்பது ஒரு சாதாரணமான விஷயம் தான். ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள் குறித்தும், நிதி ஒதுக்கீடு ஆகியவை குறித்த சந்திப்பு நிகழ்ந்தது” என்று கூறியுள்ளார்.