அரசு ஊழியர்கள் அனைவரும் அனைத்து வேலை நாட்களிலும் பணிக்கு வர வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவின் வேகம் தற்போது சற்று குறைந்து வருகிறது. இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கும் பணிக்கு வர மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. துணைச் செயலாளர் மற்றும் அதற்கு மேல் மட்டத்திலுள்ள அதிகாரிகள் மட்டுமே பணிக்கு தொடர்ந்து வந்து கொண்டிருந்த நிலையில் இனி அனைத்து ஊழியர்களும் பணிக்கு வர அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்தும் மட்டத்திலான அரசு ஊழியர்களும் அனைத்து வேலை நாட்களிலும் எந்தவித விளக்கமில்லாமல் பணிக்கு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் ஊழியர்கள் மட்டும் பணிக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேநேரம் அலுவலகத்தில் பயோ மெட்ரிக் வருகை தருவதற்கு தொடர்ந்து தடை விதிப்பதாகவும், அலுவலர்கள் கூட்டம் மற்றும் வாடிக்கையாளர்கள் சந்திப்புகள் கூடுமானவரை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.