மேற்கு வங்காள மாநிலத்தில் ஏழை மக்களுக்கு 5 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
இந்தியாவில் சில மாநிலங்களில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் குறித்த தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் கட்சிகள், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றன.அதன்படி மேற்கு வங்காள மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிப்பதற்கு மம்தா பானர்ஜி தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளார். அதே சமயத்தில் பாரதிய ஜனதா கடும் சவாலாக உள்ளது.
இந்நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் ஏழை மக்களுக்காக ஐந்து ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டத்தை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். ஐந்து ரூபாய்க்கு அரிசி சாதம், பருப்பு, காய்கறி மற்றும் முட்டை கறி கிடைக்கும். ஒரு பிளேட் சாப்பாட்டிற்கு மாநில அரசு 15 ரூபாய் மானியமாக வழங்கும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேலும் சுய உதவி குழுக்கள் மூலமாக மதியம் ஒரு மணி முதல் 3 மணி வரை இந்த உணவு கூடம் செயல்படும். மாநிலம் முழுவதிலும் இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார். இவ்வாறே தமிழகத்திலும் பல்வேறு நலத் திட்டங்களை அரசு செய்து வருகிறது. மக்கள் நலத் திட்டங்களை கொண்டுவருவதில் இந்தியாவுக்கே தமிழகம் முன்மாதிரியாக உள்ளது.