mAadhaar என்ற மொபைல் ஆப்பில் இனி 5 ஆதாரை இணைத்து கொள்ளலாம் என்று UIDAI தெரிவித்துள்ளது.
ஆதார் அட்டை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நிலை தற்போது வந்துவிட்டது. மேலும் இது இல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளையும் பெறமுடியாது. சிம் கார்டு முதல் வங்கிக் கணக்கு, பான் கார்டு வரை ஆதார் அவசியம். சில சமயம் ஆதார் கார்டு கையில் இல்லாவிட்டாலும் செல்போன் செயலி மூலமாக டிஜிட்டல் ஆதாரை வைத்துக்கொள்ள முடியும். இதற்காகவே mAadhaar என்ற மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலி மூலம், பயனர்கள் அசல் ஆதார் அட்டை கையில் இல்லாதபோது, ஆதார் அட்டையின் மென் நகலை எடுத்துச் செல்ல உதவியாக இருக்கும். இந்த செயலியில் ஆதார் குறித்த நிறைய அம்சங்கள் இருக்கின்றன. இந்நிலையில் mAadhaar தொடர்பான அறிவிப்பு ஒன்றை UIDAI வெளியிட்டுள்ளது.
அதாவது இந்த mAaadhaar செயலியில் இப்போது 5 பயனாளிகளின் விவரங்களை சேர்க்க முடியும் என்று அறிவித்துள்ளது. அதற்கு முதலில் mAadhaar மொபைல் ஆப்பை அப்டேட் செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இந்த வசதியை வாடிக்கையாளர்கள் பெற முடியும். பயனாளிகளின் புரோஃபைல்களைச் சேர்ப்பதற்கு OTP சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் UIDAI தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. பயனாளிகளின் விவரங்களைச் சேர்க்கும் போது OTP சரிபார்க்கப்படும். இதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் ஆப்பை அன்-இன்ஸ்டால் செய்துவிட்டு திருமபவும் இன்ஸ்டால் செய்து முயற்சிக்குமாறு UIDAI கேட்டுக்கொண்டுள்ளது.