குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குப்பிமேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மகன் கவிபாரதி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 1௦ ஆம் வகுப்பு படித்துக் வந்தார். இவரும் இவருடைய நண்பனான மதிவாணன் என்பவரும் நேற்று முன்தினம் மாலை விளையாட சென்றுள்ளனர். அவர்கள் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர்.
ஆனால் மாணவர்களை எங்கு தேடியும் கிடைக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மாணவர்களை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை மாணவர்களின் சைக்கிள்களும் அவர்கள் அணிந்துள்ள ஆடைகளும் கரும்பாறை குளம் பகுதியில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியில் தேடிப் பார்த்தபோது அவர்கள் குட்டையில் பிணமாகக் கிடந்ததை கண்டுள்ளனர்.
அதன்பின் காவல்துறையினர் இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு சென்றுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் கூறும்போது மீன்பிடிக்க செல்வதற்காக இங்கு வந்தபோது மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.