புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதலமைச்சரான நாராயணசாமிக்கு கடுமையான மோதல் நடந்து வந்தது நமக்கு நன்றாகவே தெரியும். சென்ற வாரம் கூட அவர் டெல்லியில் முகாமிட்டு அங்கே முதலமைச்சர் சார்பாகவும், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் சார்பாகவும் மனுக்களை அளித்து உள்துறை அமைச்சகம், பிரதமர் அலுவலகம் ஆகியோர் தலையிட்டு கிரண்பேடியை பதவியிலிருந்து விலக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் தொடர்ந்து பல முட்டுக்கட்டைகளை போட்டு வருகிறார் என்று புகார் அளித்திருந்தார்.
இதுபோல பலமுறை புகார் அளிக்கப்பட்டு இருந்த சூழ்நிலையில் தான் தற்போது கிரண்பேடி ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றார். கிரண்பேடி ராஜினாமா செய்தார் என்று குடியரசுத் தலைவர் இல்லத்திலிருந்து அளிக்கப்பட்டிருக்கும் செய்தி குறிப்பிலேயே எந்தவிதமான தகவலும் இல்லை. ஆகவே அவர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள சம்மதித்து, அதன்பிறகு நீக்கப்பட்டாரா ? அல்லது ராஜினாமா கடிதம் ஏதும் இல்லாமல் நேரடியாக விலகிக் கொள்ளும் முடிவை எடுத்திருக்கிறாரா ? என்பது போகப்போகத்தான் தெரியும்.
ஆனால் மிகவும் முக்கியமான ஒரு தருணத்தில் கிரண்பேடி புதுச்சேரி ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதற்கு பதிலாக கூடுதல் பொறுப்பு தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.