திருச்சி அருகே திருமணமாகி 20 நாட்கள் ஆன நிலையில் சாலை விபத்தில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார் மணிகண்டம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். ஞாயிறு அன்று பணி முடிந்து ரஞ்சித்குமார் தனது வீடு திரும்பிக் கொண்டிருந்தார். லால்குடி சாலையில் சாலக்குடி அருகே அகிலாண்டபுரம் என்ற இடத்தில் சென்றபோது ஒரு மினி வேன் ஒன்று குறுக்கே வந்துள்ளது. ரஞ்சித் குமார் பிரேக் அடிக்க முயன்றும் பலனில்லை. இருசக்கர வாகனம் மினிவேன் மீது வேகமாக மோதியது. தூக்கி வீசப்பட்ட ரஞ்சித்குமார் இரும்புக்கம்பு ஒன்றில் மோதி உள்ளார். அப்போது ரஞ்சித்குமார் அணிந்திருந்த ஹெல்மெட் இரண்டாக பிளந்துள்ளது.
இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் பலியானார். இது குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த காவலர் ரஞ்சித் குமாருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது தெரியவந்தது. புது மாப்பிள்ளையான ரஞ்சித்குமாரின் எதிர்பாராத மரணம் திருச்சி போலீசார் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.