மதுரை அவனியாபுரத்தில் ஏழை பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணை பலரும் பாராட்டி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் அவனியாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த மலைச்சாமி ஆனந்த ஜோதி தம்பதிகளுக்கு அபிராமி, மணிகண்டன் என்று இரண்டு குழந்தைகள் உண்டு. மலைச்சாமி நான்கு வருடங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். கணவர் மறைவுக்குப் பின்பு மனைவி ஆனந்தஜோதி வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். அன்றாட செலவுக்கே கஷ்டப்பட்டு வந்தனர். குடும்ப சூழ்நிலையை உணர்ந்து பிள்ளைகள் இருவரும் பள்ளி படிப்பு வரை படித்துவிட்டு மேற்படிப்பு படிக்க வசதி இல்லாததால் தாயாருக்கு உதவியாக இருந்து வந்துள்ளனர்.
இதற்கிடையே மகள் அபிராமி திருமண வயதை எட்டினார். மகளுக்கு திருமணம் செய்து வைக்க ஆனந்த ஜோதி திணறியுள்ளார். ஆனந்த ஜோதியின் நிலையை அறிந்த திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் அபிராமிக்கு சொந்த செலவில் திருமணத்தை நடத்த முன்வந்தார். தாய்மாமன் முறையில் சீர் வரிசையும் செய்தார். இதையடுத்து அபிராமியின் திருமணம் நேற்று நடந்தது. இதனிடையே திருமணத்திற்கு வந்த எம்எல்ஏ சரவணன் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார். மணமக்கள் அவரிடம் ஆசிர்வாதம் பெற்றனர். தொடர்ந்து மணமக்கள் உடன் அமர்ந்து உணவருந்திய டாக்டர் சரவணன் எம் எல் ஏ அங்கிருந்து மனநிறைவுடன் புறப்பட்டுச் சென்றார்.