பரிகாரம் செய்ய வேண்டும் எனக் கூறி பெண்ணிடம் இருந்து நூதன முறையில் வாலிபர் தங்க நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோனாக்கம் பட்டு கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இவரின் வீட்டிற்கு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அவர் செல்வியின் வீட்டில் உள்ள பிரச்சனைகளை கூறி அதனை நீக்க வேண்டும் என்றால் அதற்குரிய பரிகாரம் செய்ய வேண்டும் என அந்த வாலிபர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த வாலிபர் கூறியதை உண்மை என்று நம்பிய செல்வி அதற்கு எந்த பரிகாரம் செய்ய வேண்டும் என அந்த வாலிபரிடம் கேட்டுள்ளார்.
அதற்கு அந்த வாலிபர் உங்கள் வீட்டில் உள்ள தங்க நகைகளை வைத்து தான் பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறியதை நம்பிய செல்வி பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகைகளை அந்த வாலிபரிடம் கொடுத்துள்ளார்.அதன் பின் அந்த வாலிபர் கோவிலில் இந்த நகைகளை வைத்து தான் பரிகாரம் செய்து வருவதாகவும், அதற்குள் குளித்துவிட்டு வீட்டை சுத்தம் செய்யுமாறும் செல்வியிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். ஆனால் பல மணி நேரமாகியும் அந்த வாலிபர் திரும்பி வராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செல்வி இதுகுறித்து உடனடியாக ரோசனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நூதன முறையில் நகை திருடிய வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.