கடந்த ஓராண்டாக வெளிநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்த வடகொரிய அதிபரின் மனைவி தற்போது ஊடகங்களில் தோன்றியுள்ளார்.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அவர்களின் மனைவி ரிசோல் ஜு பொது நிகழ்ச்சிகளில் முக்கியமானவற்றில் அடிக்கடி கணவருடன் கலந்து கொள்வது வழக்கம். ஆனால் கடந்த வருடம் ஜனவரியில் Lunar New Yesr என்ற விடுமுறைக்கான ஒரு நிகழ்ச்சியில் கடைசியாக பங்கேற்றுள்ளார். அதன்பின்பு ஒரு வருடமாக அவர் எந்த பொது நிகழ்விலும் பங்கேற்கவில்லை. எனவே அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் அல்லது கர்ப்பம் அடைந்து இருக்கலாம் என்பது போன்ற தகவல்கள் பரவி வந்தன.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தென் கொரியாவின் தேசிய புலனாய்வு சேவை (NIS) சட்டமன்ற உறுப்பினர்களிடம் ரி சோல் கொரோனா அபாயத்தின் காரணமாகத்தான் வெளி நிகழ்ச்சிகளை தவிர்த்துள்ளார் என்றும் அவர் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இவர் ஒரு ஆண்டுக்கு பிறகு ஊடகங்களில் தற்போது தோன்றியிருக்கிறார்.
அதாவது அதிபர் கிங் ஜாங் உன்னின் தந்தையும் மறைந்த முன்னாள் தலைவருமான கிம் ஜாங் இல் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் நிகழ்ச்சியில் கிம் ஜாங் உன் தன் மனைவியுடன் கலந்து கொண்டுள்ளார். இவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள புகைப்படங்கள் அதிகாரபூர்வமான செய்தித்தாளில் வெளியிடப்பட்டிருக்கிறது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அது பற்றிய அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.