பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருகிறது. பெட்ரோல் விலை இன்று ரூ. 92.46-க்கும், டீசல் விலை ரூ. 85.79-க்கும் இன்று விற்பனையானது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் டீசல் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் டீசல் விலை உயர்வு காரணமாக லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள 4.5 லட்சம் லாரிகளில் சுமார் ஒன்றரை லட்சம் லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் லாரி தொழிலை நடத்த முடியாமல் அதன் உரிமையாளர்கள் திணறுகின்றனர். இந்நிலையில் டீசல் விலை உயர்வு, மோட்டார் தொழிலை பாதுகாக்க வேண்டும், சுங்கச்சாவடி பாஸ்ட் டேக்கில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் போராட்டம் அறிவித்துள்ளனர். இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் தேங்கும் நிலை ஏற்படும் என்று தெரிகிறது.