கோவையில் மதுபானம் கொடுக்காததால் பார் ஊழியர்களை சிலர் கண்மூடித்தனமாக தாக்கும் கொடூர வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை மற்றும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் மதுபான கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. அதன்படி வழக்கம் போலவே அனைத்து மதுபான கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில் கோவை மாவட்டம் மாலுமிச்சம்பட்டியில் உள்ள டாஸ்மாக் பார் ஒன்றில் இரவு 10.30 மணிக்கு மதுபானம் கொடுக்காததால், அதே பகுதியை சேர்ந்த சிலர் பார் ஊழியர்களை கண்மூடித்தனமாக தாக்கும் கொடூரமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை ஏதாவது எடுக்கப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.