குண்டர் சட்டத்தில் கைதான சுரேந்திரனுக்கு கிடைத்த ஜாமீன் மூலம் அவர் விடுதலையாக வாய்ப்புகள் உள்ளது.
கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் தமிழ் கடவுள் முருகனின் கந்த சஷ்டி கவசம் குறித்து சுரேந்திரன் என்பவர் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் சுரேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. மேலும் சுரேந்திரன் மீது சேலம் மாநகர சைபர் கிரைம் அதிகாரிகள் மற்றும் ஜலகண்டாபுரம் காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்தனர்.
சைபர் கிரைம் சார்பில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் நீதிபதி இன்று சுரேந்திரனுக்கு ஜாமீன் வழங்கினார். இதேபோல் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கிலும் சுரேந்திரனுக்கு மேட்டூர் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கிடையே ஜனவரி 21ஆம் தேதி சென்னை நீதிமன்றத்தில் சுரேந்திரனுக்கு ஏற்கனவே ஜாமீன் கிடைத்துள்ளது. பிப்ரவரி 4ஆம் தேதி குண்டர் சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டும் இதுவரை சுரேந்திரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால் தற்போது இந்த ஜாமீன் மூலம் அவர் விடுதலையாக வாய்ப்புகள் உள்ளது என்று தெரியவந்துள்ளது.