பீகாரில், பள்ளி மாணவியான 11 வயது சிறுமியை கற்பழித்த அவளது பள்ளி முதல்வருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.
பீகாரை சேர்ந்த அரவிந்த் என்கிற ராஜ் சிங்கனியா, ஒரு பள்ளியை நடத்தி வருகிறார். பள்ளியின் முதல்வராகவும் செயல்பட்டு வருகிறார். அந்த பள்ளிக்கு வந்த 11 வயது மாணவி ஒருவரை, கட்டாயப்படுத்தி கற்பழித்து வந்துள்ளார். இந்த சம்பவம் 2018-ல் ஆண்டு நடந்தது. இது நடந்து சில நாட்கள் கழித்து சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவரை நாடியபோது அவள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது, அதன்பின்னர் சிறுமியிடம் விசாரித்தபோது பள்ளியில் நடந்ததை கூறினார்.
ஒருநாள், ஆசிரியர் அபிஷேக்குமார், மாணவியை முதல்வர் அழைப்பதாக கூறி கூட்டிச் சென்றார். அங்கு மாணவியிடம் முதல்வர் தவறாக நடந்து, வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார். அதற்கு அபிஷேக் குமார் உடந்தையாக இருந்து, அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதுபற்றி வெளியே சொல்லக்கூடாது என்று சிறுமியை மிரட்டி உள்ளனர். அதன்பின்பும் சிலமுறை சிறுமியிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் அவள் கர்ப்பமடைந்தாள். ஆஸ்பத்திரிக்கு சென்றபோது நடந்த விஷயங்கள் அம்பலமானது.
இதையடுத்து மகளிர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க ஆரம்பித்தனர். சிறுமியின் கர்ப்பம் அரசு மருத்துவமனையில் கலைக்கப்பட்டது. அரவிந்த் குற்றவாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு மரபணு பரிசோதனை நடத்தி அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. விசாரணை அதிகாரி கூறும்போது, “குற்றம் தொடர்பான தடயங்களை அழிக்க, பள்ளி கட்டிடத்திற்கு தீ வைத்ததாகவும், தக்கசமயத்தில் போலீசார் தீயை அணைத்து தடயங்களை பாதுகாத்ததாகவும்” கூறினார்.
மேலும், தங்கள் உறவினர் மூலமாக, வழக்கை தனக்கு சாதகமாக முடிக்கவும், பள்ளி முதல்வர் முயற்சித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். அரிதினும் அரிதான இந்த வழக்கை சிறப்பு போக்சோ கோர்ட்டு நீதிபதி வடேஷ்குமார் விசாரித்து தீர்ப்பளித்தார். கொடூரமான குற்றவாளியான பள்ளி முதல்வர் அரவிந்திற்கு, தாமதமின்றி சரியான தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் தீர்ப்பு வாசிக்கும்போது குறிப்பிட்டார்.
அரவிந்திற்கு ரூ.1 லட்சம் அபராதமும், மரண தண்டனை விதிக்கப்படுவதாகவும், அவருடன் குற்றத்திற்கு துணை புரிந்த அபிஷேக்குமாருக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சிறுமிக்கு வன்கொடுமை நிதி உதவி திட்டத்தின் கீழ், எதிர்கால வாழ்வு நலன்கருதி ரூ.15 லட்சம் வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக சிறுமியின் தாயார் கூறினார்.