ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் சுமார் 3 1/2 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமளம் பகுதியை சார்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மீனாட்சி சுந்தரம். இவர் தற்போது சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனது 6௦ ஆம் கல்யாண தினத்தை கொண்டாட சொந்த ஊருக்கு வந்துள்ளார். அங்கு இவர் கல்யாண தினத்தை கொண்டாடிவிட்டு குலதெய்வ கோயிலுக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 5 பவுன் தங்க நகைகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடியது தெரிய வந்துள்ளது.
இதன் மதிப்பு சுமார் 3 1/2 இலட்சம் இருக்கும் என கூறுகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களின் கைரேகை மற்றும் சில தடயங்கள் தடயவியல் நிபுணர்களால் சேகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.