பிரியா ரமணி மீதான அவதூறு வழக்கில் டெல்லி நீதிமன்றத்தின் தீர்ப்பு பரவலான வரவேற்பை பெற்றுள்ளது
பத்திரிக்கையாளர் பிரியா ரமணி மீது முன்னாள் மத்திய அமைச்சர் எம் ஜே அக்பர் தொடுத்திருந்த அவமதிப்பு வழக்கில் இருந்து அவரை விடுவித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனது முன்னாள் மேலதிகாரி பாலியல் ரீதியாக தவறாக நடந்ததாக 2017ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்த பிரியா ரமணி, அந்த நபர் எம் ஜே அக்பர் என்று 2018 ஆம் ஆண்டு ‘மீ டூ’இயக்கம் தீவிரமான போது வெளிப்படையாக தெரிவித்தார்.
அதனால் அப்போது பதவி விலகி அக்பர், பிரியா மீது அவதூறு வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் இருந்து தற்போது பிரியா விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலும் அந்த வழக்கில் டெல்லி நீதிமன்றத்தின் தீர்ப்பு பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்: பாலியல் வன்கொடுமைக்கு எதிரான பெண்களின் குரலை தண்டிக்கக் கூடாது. ஒரு பெண் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நீதி கேட்டு எந்த தளத்திலும் முறையிடலாம். பல பத்தாண்டுகள் ஆனாலும் அதனை கூறலாம். பெண்ணின் கண்ணியத்தையும் தன்னம்பிக்கையையும் பாலியல் வன்கொடுமை அழித்து விடுகிறது. பெண்கள் முன்னேற ஆற்றல் பெற்றவர்கள். அவர்களுக்கு சுதந்திரம் சமத்துவம் தான் தேவை என்று குறிப்பிட்டுள்ளது.