மதுக்கடையில் உள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்ற 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள பிச்சைபிள்ளையேந்தல் கிராமத்தில் மது கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மது கடையில் கடந்த மாதம் பூட்டு உடைக்கப்பட்டு சுமார் 94 ஆயிரம் மதிப்புள்ள 487 மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடி உள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை கண்டுபிடிப்பதற்காக இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் எர்சாத் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை மதுக்கடையில் கொள்ளையடித்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலில் ராஜதுரை, வேலு, பிரகாஷ், பிரபுதேவா, பாண்டி, வீரபத்திரன், அரவிந்த்சாமி, முத்துகிருஷ்ணன், வன்னி முத்து ஆகியோர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மதுக்கடையில் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. மேலும் காவல்துறையினர் நடந்திய விசாரணையில் இவர்கள் பல மாவட்டங்களில் மோட்டார்சைக்கிள்கள் திருடியதும் தெரிய வந்துள்ளது. இவர்களிடமிருந்து 16 மோட்டார்சைக்கிள்களை காவல்துறையினர் கைப்பற்றிய நிலையில் மேலும் விசாரணை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.