குழந்தை பெற்ற அடுத்த இரண்டு மணி நேரத்தில் பெண்ணை வேலை பார்க்க சொன்ன கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் தேங்காய் களத்தில் பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதையடுத்து குழந்தை பெற்ற அடுத்த இரண்டு மணி நேரத்தில் அந்த பெண்ணை வேலை செய்ய சொன்ன கொடூரம் அரங்கேறியுள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காட்டை சேர்ந்தவர் கவிதா. இவர் காங்கேயம் கீரனூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் தேங்காய் உடைத்து அதை உலர்த்தும் வேலை செய்து வந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு தேங்காய் களத்திலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது அங்குள்ள நிர்வாகிகள் கவிதாவை மருத்துவனைக்கு அனுப்பி வைக்காமல் தொடர்ந்து வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் குழந்தை பிறந்த இரண்டு மணி நேரத்துக்குப் பின் தேங்காய் உடைக்கும் பணியை கவிதை செய்துள்ளார். இதையடுத்து தகவலறிந்து வந்த சாவடிபாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தலைமையிலான மருத்துவ குழுவினர் அங்கு சென்று முதலுதவி சிகிச்சை செய்து அந்த பெண்ணை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த கொடூர செயலில் ஈடுபட்ட நிர்வாகிகள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.