விவசாயியின் வீட்டில் மூன்று லட்சம் பணம் மற்றும் 40 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் முத்து என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு வேல்மயில் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். இவர்களுடன் முத்துவின் தாயாரான சுடலியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவி மற்றும் தாயை அழைத்துக்கொண்டு முத்து தோட்டத்திற்கு சென்ற பிறகு கிரிக்கெட் விளையாடுவதற்காக முருகன் தனது வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார். அதன் பிறகு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 12 லட்சம் மதிப்புள்ள 40 பவுன் நகை நகை மற்றும் மூன்று லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இச்சம்பவம் குறித்து உடனடியாக ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் தோட்டத்திற்கு செல்லும் போது முத்துவின் குடும்பத்தினர் வீட்டின் சாவியை மறைவான இடத்தில் வைத்து செல்வதை நோட்டமிட்ட மர்மநபர்கள் அதனைத் தேடிக் கண்டுபிடித்து இவ்வாறாக கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகிய தடயங்களை சேகரித்து கொண்டிருக்கும்போது, நெல்லையில் இருந்து வரவழைக்கப்பட்ட ரிக்கி என்ற மோப்ப நாய் சிறிது தூரம் ஓடி சென்று விட்டு திரும்பி வந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஆலங்குளம் போலீசார் 40 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.