தேங்காய் களத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்ணிடம் குழந்தை பிறந்த அடுத்த இரண்டு மணி நேரத்தில் வேலை செய்ய சொன்ன கொடூரம் நடந்துள்ளது. இது தொடர்பாக தேங்காய் களத்தின் நிர்வாகிகளிடம் சுகாதார துறையினர் விசாரிக்கின்றனர்.
சேலம் மாவட்டம், ஏற்காட்டை சேர்ந்தவர் வெற்றி (37). இவரது மனைவி கவிதா (30). இவர்கள் காங்கயம், கீரனுாரில் உள்ள நிறுவனத்தில், தேங்காய் உடைத்து, உலர்த்தும் வேலை செய்து கொண்டிருந்தனர். நிறைமாத கர்ப்பிணியான கவிதாவுக்கு, 12-ம் தேதி காலை தேங்காய் களத்திலேயே ஆண் குழந்தை பிறந்தது. தேங்காய் கள நிர்வாகிகள், கவிதாவை மருத்துவமனைக்கு அனுப்ப அனுமதிக்காமல், தொடர்ந்து வேலை செய்ய அறிவுறுத்தியதால், அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு பின், தேங்காய் உடைக்கும் பணியை கவிதா செய்தார்.
தகவலறிந்த சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் முரளி தலைமையிலான மருத்துவ குழுவினர் அப்பகுதிக்கு சென்று, முதலுதவி சிகிச்சை அளித்து, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஆட்சியர் விஜய கார்த்திகேயன் சப்–கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அறிக்கை வந்தவுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.