சட்டவிரோதமாக மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்ததோடு, அவரது மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காரை பகுதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பதிவெண் இல்லாத தனது மோட்டார் சைக்கிளில் ராணிப்பேட்டை அருகே உள்ள பாலாற்றிற்கு சென்றுள்ளார். அதன்பின் பாலாற்றில் இருந்து சட்டவிரோதமாக மணல் கடத்தியுள்ளார். இந்நிலையில் அவர் மோட்டார் சைக்கிளில் காரை சுடுகாடு அருகே வந்து கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.
இதனையடுத்து போலீசாரை கண்டதும் அசோக்குமார் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் போலீசார் அவரை மடக்கி பிடித்து விட்டனர். அதன்பிறகு அவரது மோட்டார் சைக்கிளை போலீசார் சோதனை செய்தபோது சட்டவிரோதமாக மணல் கடத்தியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர் நடத்திய மணலையும் அதற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்து விட்டனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ராணிப்பேட்டை போலீசார் மணல் கடத்திய குற்றத்திற்காக அசோக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.