அறிவுரை வழங்கிய சுகாதார ஆய்வாளர் மீது தாக்குதல் ஏற்படுத்தியதாக கூறி இருசக்கரவாகன நிறுவனத்தின் உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாலை கிராமத்தில் சுகாதாரத்துறை ஆய்வாளராக மனோஜ் குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அப்பகுதியில் ரோந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது சாலையில் செல்லும் பொதுமக்களிடம் முக கவசம் அணியுமாறு அறிவுரை வழங்கியுள்ளார். அந்தசமயத்தில் அதே பகுதியில் இயங்கிவரும் ஜாகீர் உசேன் என்பவருடைய இருசக்கரவாகன நிறுவனத்தில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாகும் இருந்திருக்கிறது.
மேலும் அந்த நிறுவனத்திற்குள் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் முக கவசத்தை அணியாமலும் நின்று கொண்டிருந்தவர்களை கண்ட மனோஜ்குமார் அங்கு சென்று அனைவரிடமும் அறிவுரை கூறியுள்ளார். இதனை அடுத்து இருசக்கரவாகன நிறுவனத்தின் உரிமையாளரான ஜாகீர் உசேனிடமும் விதிகளை பின்பற்ற வேண்டும் இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. அந்த சமயத்தில் ஜாகீர் உசேன் தன்மீது தாக்குதலை ஏற்படுத்தியதாக மனோஜ் குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.