கல்லூரி மாணவர் பாபநாசம் தலையணையில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர் வடகரை தெருவில் வைத்திலிங்கம் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு பொண்ணு கிளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், யோக மணிகண்டன் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் தென்காசியில் உள்ள கல்லூரியில் யோக மணிகண்டன் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் வைத்திலிங்கம் பசுவின் கன்றை கோ தானமாக வழங்குவதற்காக பாபநாசம் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது தனது உறவினர்களுடன் பாபநாசம் தலையணையில் குளிக்க சென்ற மணிகண்டன் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி விட்டார்.
இதனை பார்த்த உறவினர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தும் முடியாத காரணத்தால் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் தேடி யோக மணிகண்டனின் உடலை கைப்பற்றினர். இதுகுறித்து தகவலறிந்த விக்ரமசிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.