செல்போனுக்கு சார்ஜ் போடுவதற்காக ஸ்விட்ச் பாக்ஸில் கை வைத்த கல்லூரி மாணவியை மின்சாரம் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நன்செய் இடையாறு பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளமதி என்ற மகள் உள்ளார். இவர் பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இளமதி செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது, அதில் சார்ஜ் குறைந்ததால் சார்ஜ் போடுவதற்காக வீட்டிற்குள் சென்று ஸ்விட்ச் பாக்ஸில் கை வைத்த போது திடீரென மின்சாரம் தாக்கி விட்டது.
இதில் தூக்கி வீசப்பட்ட இளமதி கீழே விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் இளமதி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.