திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது .
திண்டுக்கல் மாவட்டம் குள்ளனம்பட்டி பகுதியில் பேகம்பூரில் ஷாஜகான் என்பவர் வசித்து வருகிறார் . இவர் குடைபாறைப்பட்டி என்ற இடத்தில் சேம்பர் லயன் தெருவில் பஞ்சு மில் ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். நேற்று மாலை நேரத்தில் தொழிலாளர்கள் மில்லில் ஒரு பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றிகொண்டது . தீ பரவியதன் காரணமாக அப்பகுதியில் கரும்புகை வெளியேறியது. தொழிலாளர்கள் மில்லுக்கு உள்ளே வேலை செய்து கொண்டிருந்ததால் தீப்பற்றியதை யாரும் காணவில்லை.
தீ பரவிய சில நேரத்தில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அறையிலும் ,அங்கிருந்த பஞ்சுகளிலும் தீப்பற்றிக் கொண்டது . தீ மளமளவென பரவியதால் தொழிலாளர்கள் பயத்தில் அலறிக்கொண்டு வெளியேறினர். பஞ்சு மில்லில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க தொழிலாளர்கள் முற்பட்டனர். இந்நிலையில் அவர்களுடன் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் மில்லுக்கு உள்ளே சிக்கிக் கொண்டிருப்பது தெரிய வர, உடனே அதிர்ச்சியடைந்து தொழிலாளர்கள் விரைந்து தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு வீரன் சக்திவேல் தலைமையில் அவருடன் பணிபுரியும் தீயணைப்பு வீரர்களும் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, பஞ்சமில்லில் ஏற்பட்ட நெருப்பை பல மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். அங்கு பணிபுரிந்த அந்தோனியார் பகுதியை சேர்ந்த பிரவீன் என்ற 27 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எனினும் அவர் உடலில் லேசான தீக்காயம் மட்டும் ஏற்பட்டதாகவும், தீ வேகமாக பரவியதால் ஏற்பட்ட கரம் புகையின் காரணமாக அவர் மூச்சுத்திணறி பலியானார் என்று தீயணைப்பு வீரர்கள் கூறினர்.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த திண்டுக்கல் மாவட்டம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் அவருடன் பணியில் இருந்த போலீசார் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் வந்து இறந்த பிரவீன் உடலை உடற்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர். பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 5 லட்சம் விலைமதிப்பிலான பஞ்சுகளும் மற்றும் அங்கு உபயோகப்படுத்திய உபகரணங்களும் தீயில் எரிந்து கருகியதாக கூறினர்.