2021 ஐபிஎல் மினி ஆக்ஷனில் மொத்தம் 292 வீரர்கள் ஏலத்தில் விடப்பட்ட நிலையில் 55 வீரர்கள் மட்டுமே விலைபோகினர். பெரும்பாலான அணிகள் ஆல்ரவுண்டர்களை வாங்கவே போட்டி போட்டுக்கொண்டு அதிக பணத்தை வாரி இறைத்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் 2.20 கோடிக்கு டெல்லி அணிக்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதேசமயம் கடந்த சீசனில் ஒருசிக்சர் கூட அடிக்காத மேக்ஸ்வெலை சிஎஸ்கேவும், ஆர்சிபியும் போட்டிபோட இறுதியில் ஆர்சிபி அணி மேக்ஸ்வெலை 14.25 கோடிக்கு வாங்கியுள்ளது. மேக்ஸ்வெல் தான் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 75 லட்சத்திற்கு அடிப்படை தொகைக்கு ஏலத்தில் வந்த கிறிஸ் மோரிஸ் 16.25 கோடிக்கு ராஜஸ்தான் அணிக்கு விலைபோனார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் மோரிஸ்.
அவருக்கு அடுத்தப்படியாக நியூசிலாந்து அணியின் பவுலிங் ஆல்ரவுண்டர் கைல் ஜேமீசனை ஆர்சிபி அணிக்கு 15 கோடிக்கும், ஆஸி. பவுலர் ஜே ரிச்சர்ட்சனை பஞ்சாப் கிங்ஸ் 14 கோடிக்கும் ஏலத்தில் எடுத்துள்ளது. இந்திய வீரரை பொறுத்த வரையில் கர்நாடகவைச் சேர்ந்த கிருஷ்ணப்பா கவுதமை சென்னை அணி 9.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் ஆடாமல் அதிக விலைக்கு போன வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கிருஷ்ணப்பா கவுதம்.ஏலத்தில் மேக்ஸ்வெலை விட்ட சென்னை அணி மொயின் அலியை ஏழு கோடிக்கு எடுத்துள்ளது.
தமிழக ரசிகர்களை பொறுத்தவரையில் இந்த ஏலத்தில் நடந்த நல்ல விஷயமாக பார்க்கப்படுவது ஷாரூக் கான் ஏலத்தில் எடுக்கப்பட்டதுதான். ஹிட்டரான இவரை பஞ்சாப் அணி அடிப்படை தொகை 20 லட்சத்தில் இருந்து 5.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அதேபோல் சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் இறுதி போட்டியில் அசத்திய தமிழக வீரர் எம். சித்தார்த்தை டெல்லி அணி அடிப்படை தொகை 20 லட்சத்திற்கு எடுத்துள்ளது. சென்னை அணிக்கு விளையாடி வந்த கேதர் ஜாதவ் ஹைதராபாத் அணிக்கும், தமிழ் புலவராக இருந்த ஹர்பஜன் சிங் கேகேஆர் அணிக்கும் இரண்டு கோடிக்கு இரண்டாம் சுற்றில் ஒப்பந்தமாகினர்.
எதிர்பார்த்ததை போலவே சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. மேற்கூறியவை போல ஏலத்தில் எடுக்கப்பட்ட 55 வீரர்களில் 25 வீரர்கள் கோடி ரூபாய்க்கு மேல் ஒப்பந்தமாகியுள்ளனர்.