வடக்கு லண்டனில் டாக்சி ஓட்டுநர் பயணி ஒருவரால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனின் வடக்கு பகுதியான டோட்டன்ஹாமில் அமைந்துள்ள பள்ளியின் வெளியே டாக்சி ஓட்டுநர் தனது பயணிகளில் ஒருவரால் குத்திக் கொல்லப்பட்டு ரத்தவெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டார். ருமேனியரான 37 வயது கேப்ரியல் பிரிங்கி கடந்த 13 ஆண்டுகளாக பிரிட்டனில் வசித்து வருகிறார். கடந்த 2015ல் இருந்தே இவர் டாக்சி ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருந்துள்ளார். இந்நிலையில் பிரிங்கி பயணியால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் நம்புகின்றனர்.
ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் கொள்ளை நடந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. எனவே இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனிடையே ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் பிரிங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.லண்டனில் இந்த வருடத்தில் மட்டும் பிரிங்கியுடன் சேர்த்து பதினைந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.