தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வெளிநபர்கள் நுழைவதற்கு தடை விதித்து உணவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது மக்களுக்கு ரேஷன் கடைகளில் இலவச பொருட்கள் வழங்கப்பட்டன. ஆனால் ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை இருந்ததால், வெளி நபர்களை ஊழியர்களாக சிலர் முறைகேடாக பயன்படுத்தி வந்தனர். அதனால் பல்வேறு புகார்களும் எழுந்தன.
இந்நிலையில் பல்வேறு ரேஷன் கடைகளில் ஊழியர் பற்றாக்குறை நிலவுவதால், கூடுதல் பணிச்சுமையை சமாளிக்க சில ஊழியர்கள் முறைகேடாக தங்களுக்கு வேண்டியவர்களை கடை பணியில் பயன்படுத்தி வருவதாக தெரிகிறது. அதனால் வெளி நபரை கடைகளுக்குள் அனுமதிக்கக் கூடாது. மேலும் ஐடி கார்டு அணிவதுடன், கடைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் ஊழியர்களுக்கு உணவு துறை அறிவுறுத்தியுள்ளது. இதையும் மீறி வெளி நபர்களை ரேஷன் கடைகளில் அனுமதித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு துறை உத்தரவிட்டுள்ளது.