பெண் போலீசாருக்கு பயன்படும் வண்ணம் சானிட்டரி நாப்கின் எந்திரத்தை காவல்நிலையத்தில் வைத்துள்ளனர்.
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ், அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் பாதுகாப்பு மற்றும் அவர்களின் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு சானிடரி நாப்கின் வெல்டிங் எந்திரத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டார். எனவே ஆயுதப்படை பிரிவு, கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் மகளிர் காவல் நிலையங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் தனியார் நிறுவனங்கள் உதவியுடன் சுமார் 65 இடங்களில் இந்த எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த சானிட்டரி நாப்கின் எந்திரத்தை கடலூர் மகளிர் காவல் நிலையத்தில் அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் பயன்பாட்டிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிநவ் வழங்கியுள்ளார்.
இந்த எந்திரத்தில் பெண் அதிகாரிகள் மற்றும் போலீசார் ஐந்து ரூபாய் நாணயத்தை போட்டு சானிட்டரி நாப்கினை எடுத்துக் கொள்ளலாம். இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் கூறும்போது, தமிழகத்திலேயே முதன்முறையாக கடலூர் மாவட்டத்தில் தான் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களின் நலனுக்காக இந்த எந்திரம் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் குறைந்த கட்டணத்தில் நாப்கினை எடுத்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வெளியில் செல்லும் போது பயன்படுத்துவதற்காக நடமாடும் கழிவறை வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வாகனத்திலும் இந்த சானிட்டரி நாப்கின் எந்திரம் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.