கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் முருகா ரெடி தெருவில் தூய தேவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி சரக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். இவரது கணவர் பிரகாஷ் காண்டிராக்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டதால் பிரகாஷின் காண்ட்ராக்டர் தொழிலும் பாதிக்கப்பட்டு 30 லட்சம் ரூபாய் வரை அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த தூய தேவி தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சோளிங்கர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.