ஓய்வுபெற்ற பள்ளி தலைமை ஆசிரியரின் வீட்டில் 70 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுக்கம் பள்ளி தெருவில் தனியார் பள்ளியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அஜித் பிரசாந்த் ஜெயின் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு மாலினி என்ற மனைவி உள்ளார். இவர் தற்போது விழுக்கம் ஜெயின் கோவில் தலைவராகவும், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினராகவும் உள்ளார். இவருக்கு சுரேந்தர் சுகுமார் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவரது மகன்கள் இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி சென்னையில் உள்ள வீட்டிற்கு அஜித் பிரசாத் தனது மனைவி மாலினியுடன் சென்றுவிட்டார். இதனையடுத்து விழுக்கத்தில் உள்ள இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக அருகில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்து விட்டனர்.
இதனையடுத்து தனது வீட்டிற்கு விரைந்து வந்த அஜித் பிரசாத் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 70 ஆயிரம் ரூபாயை யாரோ திருடி சென்றது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக திண்டிவனம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் சாய்னா என்ற மோப்ப நாய் அழைத்து வரப்பட்டது. அந்த நாய் 800 மீட்டர் தூரம் ஓடி சென்று ஊருக்குள் இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகில் நின்றுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 70 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்ற மர்ம நபரை வலை வீசித் தேடி வருகின்றனர்.