மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்ட கணவன் அரிவாளால் தனது மனைவியை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் மீனாட்சிபுரம் பகுதியில் கூலித் தொழிலாளியான சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி முனியம்மாள் கேரளாவில் இருக்கும் இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் தோட்டத்திற்கு வேலை செய்துவந்தார். இவர்களுக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். இதனை அடுத்து சந்திரன் அவர் மனைவி மீது சந்தேகப்பட்டு வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முனியம்மாள் நேற்று வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக மீனாட்சிபுரம் பஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு முனியம்மாள் ஜீப் வருவதற்காக காத்துக் கொண்டிருக்கும்போது சந்திரன் அங்கு வந்து அவரிடம் வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளார். ஆனால் முனியம்மாள் அதனை பொருட்படுத்தாமல் அங்கேயே நின்றுள்ளார். உடனே ஆத்திரமடைந்த சந்திரன் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முனியம்மாளை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த முனியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீனாட்சியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதன்பின் வீட்டில் மறைந்திருந்த சந்திரனை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். அதன் பின் காவல்துறையினர் சந்திரனிடம் நடத்திய விசாரணையில் மனைவி மீது சந்தேகப்பட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.