தமிழகம் முழுவதும் இன்று முதல் பார்சல் லாரியின் வாடகை கட்டணம் 25 சதவீதம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதற்கு காரணம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் பெட்ரோல் டீசல் விலை.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் பார்சல் லாரியில் வாடகை கட்டணம் 25 சதவீதம் உயர்த்தப்படுவதாக பார்சல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் பொருளாளர் கண்ணன் தெரிவித்துள்ளார். டீசல் விலை காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பார்சல் லாரி வாடகையை உயர்த்தபடுவதாகவும், அத்தியாவசிய பொருளை எடுத்துச் செல்வதால் டீசல் விலையை குறைக்க கலால் வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.