இந்தியாவில் இதுவரை இல்லாமல் முதன்முதலில் பெண் ஒருவருக்கு தூக்கு தண்டனை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இதுவரை கடுமையான குற்றம் செய்த பல பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அந்த தண்டனை நிறைவேற்றவும்பட்டுள்ளது. இதுவரை எந்த ஒரு பெண்ணுக்கும் இந்தியாவில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது இல்லை. ஆனால் தற்போது முதன் முதலில் உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணிற்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பாவன்கேரி மாவட்டத்தை சேர்ந்த சப்னம் அலி என்ற பெண் அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். அப்போது அவர் சலீம் என்ற கூலித் தொழிலாளியை காதலித்துள்ளார். அதனால் சப்னம் அலி கர்ப்பம் அடைந்துள்ளார் . ஆனால் இவர்களின் காதலுக்கு சப்னம் அலியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனால் 7 வார கர்ப்பிணியாக இருந்த சப்னம் அலி தனது குடும்பத்தினர் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.
அப்போது அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் பாலில் மயக்க மருந்தை கலந்து கொடுத்துள்ளார். பின்னர் அவர்களின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். தனது தாய், தந்தை சகோதரர்கள், சகோதரரின் 10 வயது மகன் உட்பட 7 பேரை சப்னம் அலி ஈவு இரக்கமின்றி கொடூர முறையில் கொலை செய்துள்ளார். இந்த கொலை வழக்கை விசாரித்த உத்திரப்பிரதேச மாநில நீதிமன்றம் காதலர்களுக்கு மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சப்னம் அலி குடியரசுத்தலைவரிடம் கருணை மனு ஒன்றை அளித்தார்.
குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்த நிலையில் சப்னம் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார் . அந்த மறு சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் சப்னம் அலியையும் அவரது காதலன் சலீமையும் தூக்கிலிடுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு இந்தியாவில் பல பெண்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த மரண தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.