அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள செட்டிகுறிச்சியில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இந்த கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து விட்டு தூத்துக்குடி நான்கு வழி சாலை ஓரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் கல்லூரியை செயல்படுவதாகவும், அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் மாணவ-மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு கல்லூரிக்கு வருவதற்கு பேருந்து வசதி, குடிநீர் வசதி மற்றும் சாலை வசதி போன்ற அடிப்படை தேவைகள் நிறைவு செய்யப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர், இந்தப் போராட்டம் பற்றி தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாணவர்களின் கோரிக்கைகளை மனுவாக பெற்று கல்லூரி முதல்வரிடம் இது குறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து, போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.