செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியில் 11வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை மகளிர் காவல் துறையினர் கையும், களவுமாக கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதிகளில் வசித்து வருபவர் ஸ்ரீதர். இவர் வசித்து வரும் வீட்டின் எதிரே உள்ள வீட்டில் 11 வயது சிறுமி இருந்துள்ளார். அந்த சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடுவது வழக்கம். அப்போது காமுகன் ஸ்ரீதர் சிறுமியிடம் நைசாக பேசுவது போல பழகி, சிறுமியிடம் தவறாக நடந்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் இதனை வெளியில் சொல்லக்கூடாது என சிறுமியை மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் பயந்து போன சிறுமி, இது குறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனை கேட்டு சிறுமியின் பெற்றோர் ஸ்ரீதர் மீது செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதனை தொடர்ந்து ஸ்ரீதரிடமும், சிறுமியிடமும் விசாரணை மேற்கொண்ட மகளிர் போலீசார் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஸ்ரீதரை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் ஸ்ரீதரின் மனைவி மருத்துவராக பணியாற்றி வரும் நிலையில் ஸ்ரீதர் வீட்டிலே இருந்து வந்ததால் எதிரில் இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாக விசாரணையில் தெரியவந்தது.