சென்னையில் மனைவி சண்டை போட்டு சென்றதால் ஆத்திரம் அடைந்த கணவர், சாமியாரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயல் அடுத்துள்ள ஆலப்பாக்கம் என்ற பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் ஆதிபராசக்தி அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் இருந்து பொதுமக்களுக்கு அவர் அருள்வாக்கு சொல்லி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் வசித்து வரும் திருமலை என்பவரின் மனைவி கணவருடன் சண்டை போட்டு வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அதனால் ஆத்திரத்தில் இருந்த திருமலை, தன்னுடைய மனைவி தன்னுடன் சண்டையிட்டு சென்றதற்கு அருள்வாக்கு சொல்லும் ராஜேந்திரன் தான் காரணம் என்று கருதினார். தன்னைப்பற்றி தன் மனைவியிடம் தவறாக சொல்லி இருக்கலாம் என்று எண்ணி ஆத்திரத்தில் சாமியாரை கொலை செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து சாமியாரை சந்திப்பது போல் சென்று, அதன் பிறகு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாமியாரை கண்மூடித்தனமாக குத்தினார். அதனால் சாமியார் ரத்த வெள்ளத்தில் அலறினார்.
அந்த அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ஊர் பொது மக்கள் சாமியாரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதுமட்டுமன்றி தப்பி ஓட முயன்ற திருமலையை மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது கத்தியால் குத்தப்பட்ட ராஜேந்திரன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.