தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன்பிறகு பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகம் திரும்பினார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் 2 தொகுதிகளில் போட்டியிடுவார் என்ற தகவல் கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களில் கசிந்து வருகிறது.சென்னை மயிலாப்பூர் மற்றும் தி நகர் தொகுதிகளில் போட்டியிட அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் கமல் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பிப்ரவரி 21ஆம் தேதி நடைபெறும் அக்கட்சியின் நான்காவது ஆண்டு விழாவில் கட்சியின் கூட்டணி நிலைபாட்டை கமல்ஹாசன் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.